உபநயனம்
கீதா சாம்பசிவம்
உபநயனம்
கீதா சாம்பசிவம்
http://FreeTamilEbooks.com
சென்னை
You are free to:
Share — copy and redistribute the material in any medium or format
for any purpose, even commercially.
The licensor cannot revoke these freedoms as long as you follow the license terms.
Under the following terms:
Attribution — You must give appropriate credit, provide a link to the license, andindicate if changes were made. You may do so in any reasonable manner, but not in any way that suggests the licensor endorses you or your use.
NoDerivatives — If you remix, transform, or build upon the material, you may not distribute the modified material.
No additional restrictions — You may not apply legal terms or technological measures that legally restrict others from doing anything the license permits.
Notices:
You do not have to comply with the license for elements of the material in the public domain or where your use is permitted by an applicable exception or limitation.
No warranties are given. The license may not give you all of the permissions necessary for your intended use. For example, other rights such as publicity, privacy, or moral rights may limit how you use the material.
This book was produced using PressBooks.com.
Contents
நூல் முன்னுரை
நூலாசிரியர்
மின்னூல் ஆக்கம்
உரிமை
1. உபநயனம் என்றால் என்ன?
2. செளளம் என்னும் குடுமிக் கல்யாணம்
3. உபநயன ஸம்ஸ்காரம்
4. பிரஹ்மோபதேசம்
5. மாணவனோடு ஆசாரியர் உரையாடல்
6. உபநயனம் சில சடங்குகள்
7. காயத்ரி மந்திரம்
எங்களைப் பற்றி
1
நூல் முன்னுரை
இன்றைய அவசர உலகில் சடங்குகள் யந்திரரீதியாகவே நடத்தப்படுகின்றன. யாரும் அதன் முழுப் பொருளைப் புரிந்து கொண்டு அதன் தேவையை உணர்ந்து அதன் பெருமையையும், உள்ளார்ந்த பொருளையும் புரிந்து கொண்டு செய்வதில்லை. மேலும் ஆண்களுக்குச் செய்யப்படும் உபநயனம் என்பதைப் பற்றிப் பல்வேறு கருத்துகள் நிலவுகின்றன. இது குறிப்பிட்ட ஒரு சமூகமே குறிப்பாய் பிராமண சமூகமே இன்றளவும் கடைப்பிடிப்பதால் அவர்களுக்கு மட்டுமே உரித்தானது என்னும் தவறான கருத்தும் நிலவுகிறது. நித்ய கர்ம அநுஷ்டானங்கள் அனைவருக்கும் பொதுவானவை. இதிலே பிராமணர் மற்ற சமூகம் என்ற பாகுபாடெல்லாம் இல்லை. ஆனால் பிராமணர்களிலேயே பலருக்கும் இந்த உபநயனம் குறித்த முழு அறிவு இல்லை. இதை ஒரு ஆடம்பரச் சடங்காக மாற்றியதோடு மட்டுமில்லாமல் ஆடம்பரமாகவும் நடத்திப் பெருமை கொள்கின்றனர். மேலும் உபநயனம் செய்து கொள்ளும் ஆண் குழந்தையின் வயதும் இக்காலங்களில் குறைந்த பக்ஷம் பதினைந்தாகிவிடுகிறது.
இன்னும் சில குடும்பங்களில் முதல் நாள் உபநயனம் பேருக்குப் பண்ணிவிட்டு மறுநாள் கல்யாணம் எனச் செய்வதையும் பார்க்க முடிகிறது. அப்படி எல்லாம் செய்யக் கூடாது என்பதோடு அதன் உண்மையான பொருளையும், அதன் தேவையையும், அது கொடுக்கும் மனக்கட்டுப்பாட்டையும் அதன் மூலம் மேம்படும் ஆன்மிக வாழ்க்கையையும் எடுத்துச் சொல்வதற்காகவே இந்தப் படைப்பு. உபநயனம் ஏன் என்பதைக் குறித்துச் சிறு சிறு குறிப்புக்களாக அச்சிட்டு உபநயனங்கள் செய்யுமிடத்தில் விநியோகிக்கலாம். இதன் மூலம் உபநயனம் செய்வதன் காரண, காரியங்கள் புரிய வரும். மறைந்து வரும் நல்ல நல்ல கலாசாரங்களை மீண்டும் வழிமுறைப்படுத்தி நெறிப்படுத்துவதும் இதன் முக்கிய நோக்கம். இன்றைய இளம்பெற்றோர் முதல் இளைஞர்கள் வரை படித்துப் பயனுறவேண்டும் என்பதும் இன்னொரு முக்கிய நோக்கம்.
தகவல்கள் உதவி: தெய்வத்தின் குரல், திரு திவாஜி, திரு சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்.
படம் மூலம்: http://www.flickr.com/photos/abderian/5210360289/sizes/l/
2
நூலாசிரியர்
என்னைப் பற்றிச் சொல்ல அதிகம் இல்லை. தமிழில் சிறு வயது முதலே ஆர்வம் என்றாலும் தமிழை ஒரு மொழியாக மட்டுமே பள்ளி நாட்களில் படிக்க நேர்ந்தது. ஆகவே தமிழ் இலக்கணம், இலக்கியம், கவிதைகள் எல்லாம் படித்து ரசிப்பதோடு சரி. ஹிந்தியில் பிஜி டிப்ளமா வாங்கியுள்ளேன். மற்றபடி வெகுநாட்களாக எழுத்துத் தொழிலில் ஆர்வம் இருந்தாலும் எதுவும் எழுதி எந்தப் பத்திரிகையிலும் வந்தது இல்லை.
முதல் முதல் எழுத ஆரம்பித்தது இணையத்தில் தான். என்னையும் நம்பி என்னை எழுதத் தூண்டியவர் மழலைகள்.காம். நடத்தும் திரு ஏ.கே. ராஜகோபாலன் அவர்கள். பல முறை ஊக்கம் கொடுத்து என்னை எழுத வைத்தார். மழலைகளில் புராணங்களில் இருந்து தொகுக்கப்பட்ட பிள்ளையார் கதைகளைப் பிள்ளையார் பாட்டி என்ற பெயரில் எழுதினேன். பின்னர் நாயன்மார்கள் குறித்துத் தற்போது எழுதி வருகிறேன். சில வருடங்களுக்கு ஒரு முறை அமெரிக்கா செல்வதால் அமெரிக்க வரலாற்றை எழுதும்படி ஏ.கே.ராஜகோபாலன் கேட்டுக் கொண்டதன் பேரில் அதை எழுதி வருகிறேன். யோகாசனங்கள் பயிற்சி குறித்தும் கட்டுரைகள் எழுதி இருக்கிறேன். மின் தமிழ், தமிழ் வாசல், தமிழ்ச் சிறகுகள், மழலைகள், இல்லம் ஆகிய குழுமங்களில் பங்கெடுத்துக் கொள்கிறேன்.இதன் மூலமே பல விஷயங்களைத் தெரிந்து கொள்ள முடிந்திருக்கிறது. உலகளாவிய நண்பர்களும் இருக்கின்றனர்.
என் கணவர் உதவியுடன், சிதம்பரம் நடராஜர் கோயில் குறித்த பல விஷயங்களையும் கேட்டுப் படித்து அறிந்து கொண்டு தொகுத்து, “சிதம்பர ரகசியம்” என்னும் பெயரில் தொடராக எழுதி வந்தேன். இணைய உலகில் என்னைப் பலரும் அறியும்படி செய்தது திருக்கைலை யாத்திரைத் தொடரும், சிதம்பர ரகசியம் தொடருமே என்றால் மிகை ஆகாது. இப்போது ஹிந்துத் திருமணங்களில் பிராமணர்களின் திருமணங்களின் சடங்குகள் குறித்து விரிவாக ஒரு தொடர் எழுதி இருக்கிறேன். விரைவில் அதுவும் மின்னூலாகக் கிடைக்கும்.
கீதா சாம்பசிவம்.
3
மின்னூல் ஆக்கம்
மின்னூல் ஆக்கம் : கி. சிவகார்த்திகேயன் [email protected]
மின்னூல் வெளியீடு : http://FreeTamilEbooks.com
வெளியீட்டாளர்: த. ஸ்ரீனிவாசன், தரை தளம் 4, சுபிக்ஷா அடுக்ககம், 42, வியாசர் தெரு, கிழக்கு தாம்பரம் சென்னை – 600 059
தொ. பே: +91 98417 95468 – [email protected]
நன்றி : http://pressbooks.com
4
உரிமை
இந்த கையேடு Creative Commons License வழங்கப்பட்டதாகும். அதனடிப்படையில் எவரும் இதனை திருத்தம் செய்து மேம்படுத்திக் கொள்ளலாம்.
உபநயனம், கீதா சாம்பசிவம் by geethasmbsvm6 at gmail.com is licensed under a Creative Commons Attribution 4.0 International License.
You are free to:
Share — copy and redistribute the material in any medium or format
Adapt — remix, transform, and build upon the material for any purpose, even commercially.
The licensor cannot revoke these freedoms as long as you follow the license terms.
Under the following terms:
Attribution — You must give appropriate credit, provide a link to the license, and indicate if changes were made. You may do so in any reasonable manner, but not in any way that suggests the licensor endorses you or your use.
No additional restrictions — You may not apply legal terms ortechnological measures that legally restrict others from doing anything the license permits.
1
உபநயனம் என்றால் என்ன?
உபநயனம் என்றால் அருகில் ‘அழைத்துச் செல்லுதல்’ என்றபொருளில் வரும். உப என்றால் அருகே என்றும் நயன என்பது அழைத்துச் செல்வது என்றும் பொருள் கொடுக்கும். இந்த உபநயனம் என்பது பூணூல் கல்யாணம் என அழைக்கப் பட்டு மிகச் சிறப்பாகவும் ஆடம்பரமாகவும் நடக்கும் ஒரு விழாவாக மாறி விட்டது.
அந்தணர்கள் மட்டுமின்றி, வணிகர்கள், மன்னர்கள் முதலானவர்களுக்கும் உபநயனம் உண்டு. ஒரு காலத்தில் எல்லாருமே பூணூல் தரித்திருந்தனர். எல்லாவற்றிலும் மாறிய நம் கலாசாரம் இதிலும் மாறிவிட்டது. வேத மந்திரங்களை ஜபித்து, பிராண பிரதிஷ்டை செய்து பூணூல் தயாரிப்பார்கள். இதில் 96 இழைகள் இருப்பதாய்ச் சொல்லப் படுகிறது. சுத்தமான பஞ்சைத் தக்ளியில் நூலாக நூற்று, அதிலே 96 இழைகள் சேர்த்து, வேத மந்திரங்களை ஜபித்து, பிராண பிரதிஷ்டை செய்து பூணூல் தயாரிப்பார்கள். இது மிகவும் கவனத்துடன் செய்ய வேண்டிய வேலை. இந்தப் பூணூலுக்கு வடமொழியில் யக்ஞோபவீதம் என்ற பெயர். அப்படிப் பட்ட பூணூலைத் தயாரிக்கையில் காயத்ரி மந்திரத்தை ஜபித்துக்கொண்டே தயாரிப்பார்களாம். அப்படி ஜபித்து ஜபித்து உரு ஏற்றப்பட்ட பூணூலுக்கு சக்தி அதிகம். இதை ஒரு சிறுகதை மூலம் முதலில் பார்ப்போம்.
ஒரு ஏழை பிராமணர் பூணூல் தயாரித்துக் கொடுத்து அதில் வரும் சொற்ப வருமானத்தில் வாழ்க்கையை எப்படியோ ஓட்டி வந்தார். கொடுத்தவர்கள் அவர் வாழ்க்கையை நடத்தத் தேவையான பொருளைக் கொடுத்திருப்பார்கள் போலும். ஏனெனில் அவர் ஏழையாகவே இருந்தார். அவரும் திருமணமாகி ஒரு பெண்மகவைப் பெற்றெடுத்தார். என்றாலும் பூணூல் தயாரிப்பும் அதைக் கொண்டு வாழ்க்கை நடத்துவதும் நிற்கவில்லை. அந்த ஊர் அரசன் மிகவும் சத்தியவான். சொன்னால் சொன்னபடி அனைவருக்கும் செய்வான். அரசன் நல்லவனாக இருந்ததால் ஊர் மக்களும் பிராமணருக்கு ஓரளவு உதவி வந்தனர். என்றாலும் அதில் பெண்ணின் கல்யாணத்தை நடத்த முடியுமா? ஆம்; பிராமணரின் பெண்ணிற்குத் திருமண வயது வந்துவிட்டது. அக்கால வழக்கப்படி ஏழு வயதுக்குள்ளாகத் திருமணம் முடிக்க வேண்டும். ஒரு மாப்பிள்ளையும் அந்தப் பெண்ணைக் கல்யாணம் செய்து கொள்ளச் சம்மதித்தான். ஆனால் அந்தக் கல்யாணத்தைக் குறைந்த பக்ஷமான செலவுகளோடு நடத்தியாக வேண்டுமே. என்ன செய்யலாம்? காயத்ரியை ஒருமனதாக வாய் ஜபிக்க பிராமணர் எந்தக் கவலையும் இல்லாமல் இருக்க அப்படியே மனையாளும் இருப்பாளா? அவள் பெண்ணின் திருமணத்திற்காகப் பொருள் தேடும்படி பிராமணரைத் தூண்டி விட, அவரும் செய்வதறியாது மன்னனிடம் சென்றார்.
மன்னனும் பிராமணரை வரவேற்று உபசரித்தான். அவர் முகத்தின் ஒளி அவனைக் கவர்ந்தது. இது எதனால் என யோசித்துக்கொண்டே அவர் வந்த காரியம் என்னவோ என வினவினான். பிராமணரும் தன் மகளுக்குத் திருமணம் நிச்சயித்திருப்பதாகவும், அதற்கான பொருள் தேவை என்பதாலேயே மன்னனிடம் வந்திருப்பதாகவும் கூறினார். அவ்வளவு தானே! நான் தருகிறேன் என்ற மன்னன் எவ்வளவு பொருள் தேவை எனக் கேட்க, கூசிக் குறுகிய பிராமணரோ, தன்னிடமிருந்த பூணூலைக் காட்டி,” இதன் எடைக்குரிய பொற்காசைக் கொடுத்தால் போதும்; ஒருமாதிரி சமாளித்துக்கொள்கிறேன்.” என்று கூறினார். மன்னன் நகைத்தான். ஒரு தராசை எடுத்துவரச் சொல்லிப் பூணூலை அதில் இட்டு மறுபக்கம் சில பொற்காசுகளை வைக்கச் சொன்னான். பூணூல் இருக்கும் பக்கம் தராசுத்தட்டு தாழ்ந்தே இருந்தது. மேலும் பொற்காசுகளை வைக்க….ம்ஹும்..அப்படியும் பூணூல் இருக்கும் தட்டு தாழ்ந்தே இருந்தது. தராசும் பத்தவில்லை. பெரிய தராசைக் கொண்டு வரச் செய்தான் மன்னன். மேலும் பொற்கட்டிகள், வெள்ளிக்கட்டிகள், நகைகள், ரத்தினங்கள் என இட இட தராசுத்தட்டு தாழ்ந்தே போக, தன் கஜானாவே காலியாகுமோ என பயந்த மன்னன் மந்திரியைப் பார்த்தான்.
சமயோசிதமான மந்திரியோ, “பிராமணரே, இன்று போய் நாளை வந்து வேண்டிய பொருளைப் பெற்றுக்கொள்ளும். நாளை வருகையில் புதிய பூணூலைச் செய்து எடுத்துவரவும்.” எனக் கூறினார். கலக்கத்துடன் சென்றார் பிராமணர். இத்தனை நாட்களாக மனதில் இருந்த அமைதியும், நிம்மதியும் தொலைந்தே போனது. மன்னன் பொருள் தருவானா மாட்டானா? ஆஹா, எத்தனை எத்தனை நவரத்தினங்கள்? அத்தனையையும் வைத்தும் தராசுத்தட்டு சமமாகவில்லையே? நாளை அத்தனையையும் நமக்கே கொடுத்துவிடுவானோ? அல்லது இன்னமும் கூடக் கிடைக்குமா? குறைத்துவிடுவானோ? பெண்ணிற்குக் கொடுத்தது போக நமக்கும் கொஞ்சம் மிஞ்சும் அல்லவா? அதை வைத்து என்ன என்ன செய்யலாம்? பிராமணரின் மனம் அலை பாய்ந்தது. அன்றிரவெல்லாம் தூக்கமே இல்லை. காலை எழுந்ததும், அவசரம், அவசரமாக நித்ய கர்மாநுஷ்டானங்களை முடித்தார். பூணூலைச் செய்ய ஆரம்பித்தார். வாய் என்னவோ வழக்கப்படி காயத்ரியை ஜபித்தாலும் மனம் அதில் பூர்ணமாக ஈடுபடவில்லை. தடுமாறினார். ஒருமாதிரியாகப் பூணூலைச் செய்து முடித்தவர் அதை எடுத்துக்கொண்டு மன்னனைக் காண விரைந்தார். அரசவையில் மன்னன், மந்திரிமார்கள் வீற்றிருக்க மீண்டும் தராசு கொண்டு வரப்பட்டது. அன்று அவர் தயாரித்த பூணூலை தராசுத்தட்டில் இட்டு இன்னொரு தட்டில் சில பொற்காசுகளை வைக்கச் சொன்னான் மன்னன். என்ன ஆச்சரியம்? பொற்காசுகள் இருக்கும் தட்டு தாழ்ந்துவிட்டதே? சில பொற்காசுகளை எடுத்துவிட்டு இரண்டு, மூன்று பொற்காசுகளை வைத்தாலும் தட்டுத் தாழ்ந்து போயிற்று. பின்னர் அவற்றையும் எடுத்துவிட்டு ஒரே ஒரு பொற்காசை வைக்கத் தட்டுச் சமம் ஆயிற்று. அதை வாங்கிக் கொண்டார் அந்த பிராமணர்.
பிராமணர் அங்கிருந்து சென்றதும் மன்னனுக்கு ஆச்சரியம் அதிகமாக மந்திரியிடம், “முதலில் எவ்வளவு பொருளை வைத்தாலும் தாழாத தட்டு இன்று சில பொற்காசுகளை வைத்ததுமே தாழ்ந்தது ஏன்?” என்று கேட்க, மந்திரியோ, “மன்னா, இந்த பிராமணர் உண்மையில் மிக நல்லவரே. சாதுவும் கூட. இத்தனை நாட்கள் பணத்தாசை ஏதும் இல்லாமல் இருந்தார். தேவைக்காகத் தான் உங்களை நாடி வந்தார். வந்தபோது அவர் கொடுத்த பூணூல் அவர் ஜபித்த காயத்ரியின் மகிமையால் அதிக எடை கொண்டு தனக்கு நிகரில்லாமல் இருந்தது. அந்தப் பூணூலை வைத்திருந்தால் ஒருவேளை உங்கள் நாட்டையே கூடக் கொடுக்க வேண்டி இருந்திருக்கலாம்; அவ்வளவு சக்தி வாய்ந்தது காயத்ரி மந்திரம். ஆனால் அவரைத் திரும்ப வரச் சொன்ன போது, அவர் பணம் கிடைக்குமா,பொருள் கிடைக்குமா என்ற கவலையில் காயத்ரியை மனம் ஒருமித்துச் சொல்லவில்லை. ஆகவே மறுநாள் அவர் கொண்டு வந்த பூணூலில் மகிமை ஏதும் இல்லை. அதனால் தான் பொற்காசுகளை வைத்ததுமே தட்டுத் தாழ்ந்துவிட்டது.” என்றான் மந்திரி.
இந்த காயத்ரி மந்திரத்தையும், அதன் சக்தியைக் குறித்தும், அதை உபதேசமாய்ப் பெற்று அன்றாடம் ஜபிக்க வேண்டிச் செய்யப்படும் உபநயனம் குறித்தும் மேலும் விபரமாகப் பார்ப்போமா.
2
செளளம் என்னும் குடுமிக் கல்யாணம்
முதலில் ஆண் குழந்தைகளுக்குச் செய்யப்படும் செளளம் என்னும் குடுமிக் கல்யாணம் பற்றி பார்ப்போம்.
இது பொதுவாக பிறந்த முதல் வருஷமே அன்னப்பிராசனத்திற்குப் பின்னர் செய்யப்படும். இதற்கும் நல்ல நாள், நக்ஷத்திரம் எல்லாமும் பார்த்துக் குழந்தையைத் தாய் மாமன் மடியில் அமர்த்திக் கொள்வார். குழந்தையை உட்கார்த்திக் கொண்டு மாமன் அமரும் இடம் கோலம் போட்டுச் செம்மண் பூசி இருக்கும். ஒரு சுளகில் அல்லது முறத்தில் காளைமாட்டின் சாணத்தோடு நெல்லையும் சேர்த்துத் தயாராக வைத்திருப்பார்கள். அதைக் குழந்தையின் தாய் அல்லது திருமணம் ஆகாத பிரமசாரிப் பிள்ளையோ கையில் வைத்திருக்க வேண்டும்.
குழந்தையைக் கிழக்குப் பார்த்து வைத்த வண்ணம் மாமா அமர, தலைமுடியை நீக்குவார்கள். இதற்கும் ஹோமம் எல்லாம் உண்டு . அந்த ஹோமாக்னிக்கு எதிரேயே கிழக்குப் பார்த்து உட்கார வைத்துத் தலையை வெந்நீரால் நனைத்துக் கொண்டு மந்திரங்கள் சொன்ன வண்ணம் மூன்று மூன்று தர்பைகளை இடையில் வைத்து நான்கு மந்திரங்களைச் சொல்லிக் கொண்டே ஒவ்வொரு மந்திரத்துக்கும் ஒவ்வொரு திசையில் முடியை வெட்டுவார்கள். இதைத் தான் கீழே விழாமல் தாயோ அல்லது பிரமசாரிப்பிள்ளையோ வாங்கிக் கொள்வார்கள். காளைமாட்டின் சாணத்தோடு நெல் கலந்து தயாராக இருக்கும் மடக்கு, அல்லது சுளகு, அல்லது முறத்தில் வாங்கிக் கொண்டு அத்திமரம் கிடைத்தால் அதனடியிலோ அல்லது நதிக்கரை, குளக்கரைகளில் நாணல் புதர்களிலோ வைப்பார்கள். இதன் பின்னர் குழந்தைக்குக் குடுமி தான் இருக்கும். இப்போதெல்லாம் முடியை நீளமாக ஃபாஷனுக்காக வளர்த்துக்கொள்கின்றனர். ஆனால் இதற்கு எந்தவிதமான மந்திரோபதேசமும் கிடையாது.
முடியை வளர்த்துக் குடுமியாக்கியதும் அதை நீக்குவது கூடாது என்பார்கள். ஆத்மசக்தி விரயம் ஆகாமல் மனோபலத்தை அதிகரித்துக் கட்டிப் போடுவதால் குடுமியைக் கட்டாயமாக அந்த நாட்களில் அனைவரும் வைத்துக்கொண்டார்கள். மஹாபாரதப் போரில் பாண்டவர்களின் வாரிசுகளை அடியோடு அழித்த அஸ்வத்தாமாவைப் பழிவாங்க நினைத்த அர்ஜுனன் குரு புத்திரனைக் கொல்வது எப்படி எனத் திகைத்துப் பின்னர் சிகையை அடியோடு வெட்டியதாகப் படித்திருக்கிறோம் அல்லவா! அது அவன் ஆத்மபலத்தை அடியோடு அழித்துவிடவில்லையா? அது போல் தான். பெண்களுக்கு இந்தக் குடுமிக் கல்யாணம் இல்லை என்றாலும் தலைமுடியை அவர்களும் வாரிப் பின்னித் தூக்கிக் கட்டிக்கொள்ள வேண்டும், நுனி வெளியே தெரியக் கூடாது என்று சொல்வார்கள். தூக்கிக் கட்டினால் நுனி மேல் நோக்கி இருக்கலாம் என்றும் கூறுவார்கள். ஆனால் இந்தக் காலத்தில் அது நடப்பதில்லை. எல்லாருமே தலையை விரித்துத் தான் போட்டுக் கொள்கின்றனர். வட மாநிலங்களில் மத்ரா அருகே கோகுலத்தில் பிரிஜ்பாசி பிராமணர்களில் இப்போதும் இந்தக் குடுமிக் கல்யாணம் கட்டாயமாக நடைபெற்று வருவதைக் காண முடியும்.
இதற்குப் பின்னர் வருவதே உபநயனம் ஆகும். உபநயனம் என்றால் குருவிடம் அழைத்துச் செல்வது என்று பார்த்தோம். குரு வந்து கையைப் பிடித்துக்கொண்டு கூட்டிச் செல்வது என்ற பொருளில் அல்ல. உபநயனத்தின் போது தந்தையானவர் மகனுக்கு குருவைக் காட்டி, “இனி இவர் தான் சில காலங்களுக்கு உனக்குத் தந்தை.” என்று காட்டுவார். குரு மூலமே காயத்ரி மந்திர உபதேசமும் நடக்கும். அதன் பின்னர் குறைந்தது பனிரண்டு வருஷங்கள் குருவிடம் மாணவனாக குருகுலத்தில் இருக்க வேண்டும். பொதுவாக இதற்கு வயசும் உண்டு. எட்டு வயதில் உபநயனம் செய்ய வேண்டும் என்பார்கள். நாமெல்லாம் பிறந்த தேதியை வைத்து வருடத்தைக் கணக்கிட்டாலும் சாஸ்திர, சம்பிரதாயங்கள் கர்ப்ப காலத்தையும் சேர்த்துக்கொள்ளும். ஆகவே கர்ப்ப காலத்தையும் சேர்த்தே எட்டு வயசு ஆக வேண்டும். பிறந்து ஏழு வயதும் இரண்டு அல்லது மூன்று மாதமும் ஆகி இருந்தால் சரியாக இருக்கும். ஏனெனில் இந்த வயதில் குழந்தை குழந்தையாகவே இருப்பான். மனதில் விகார எண்ணங்கள் இராது. தவிர்க்க முடியாமல் போனால் தான் பதினாறு வயதுக்குள்ளாக உபநயனம் செய்விக்கலாம். இது பிராமணருக்கானது.
க்ஷத்திரியர்களுக்கான காலகட்டம் பதினொரு வயதில் இருந்து 22 வயது வரைக்கும். வைசியர்களுக்கான கால கட்டம் 12 வயதில் இருந்து 24 வயதுக்குள்ளாக. அதற்குள்ளாக உபநயனம் செய்துவிட வேண்டும். இந்த உபநயனம் செய்விப்பதன் மூல காரணமே அந்தக் குழந்தை ஜபிக்கும் காயத்ரி மந்திரத்தின் ஆன்மீக அதிர்வலைகள் அவனுக்கு மட்டுமின்றிச் சுற்றி உள்ளவர்களுக்கும் ஏற்படுத்தும் நன்மையைக் கருத்தில் கொண்டே செய்யப்படுகிறது. குழந்தையின் மனதில் காமம் புகுந்து கொள்ளுமுன்னர் உபநயனம் செய்விக்க வேண்டும். மனதை ஒருநிலைப்படுத்த காயத்ரி மந்திரம் துணை நிற்கும். ப்ரம்ஹ தேஜஸை உபநயனம் செய்வித்த பிள்ளை சம்பாதித்துக்கொண்டு மற்றவர்களுக்கும் அதன் மூலம் நன்மையை ஏற்படுத்த முடியும்.
3
உபநயன ஸம்ஸ்காரம்
உபநயன ஸம்ஸ்காரம் பிராமணர்களுக்கு மட்டுமல்ல, என்பதைக் குறிக்கும் ஸ்லோகம் கீழே கொடுத்திருக்கிறேன்.
கர்ப்பாஷ்டமேஷு ப்ராமண உபநயீத
கர்ப்பைகாதெசேஷு ராஜன்யம்
கர்ப்பத்வாத்யசேஷு வைஸ்யம்
என்ற இந்த ஸ்லோகம் இது ராஜாக்களான க்ஷத்திரியர்களுக்கும், வைசியர்களுக்கும் கூட இருந்ததைக் காட்டுகிறது. ஆகவே உபநயனம் என்பது பிராமணர்களுக்கு மட்டுமே என்றானது பதினெட்டாம் நூற்றாண்டிற்குப் பின்னரே ஆகும். இந்த உபநயனத்தின் மூலம் குழந்தையை குருவிடம் சேர்ப்பித்துக் கல்வி கற்க ஏற்பாடு செய்வதற்கான ஒரு முக்கியமான சம்ஸ்காரமே உபநயனம் ஆகும். கல்விக்காக மாணவனைத் தயார் செய்யும் ஒரு சம்ஸ்காரம் என்றும் சொல்லலாம். இதற்கு அப்தோபதேசம் என்னும் பெயரும் வழங்கப்படுகிறது.
கல்வியே மாணவனுக்கு உள்ளத் தூய்மையை ஏற்படுத்தி உயர்ந்த சிந்தனைகள் தோன்றும். நல்லது, கெட்டதை ஆராயும் போக்கு உருவாகும். உண்மை எது, பொய் எது எனப் பிரித்துப் பார்க்கத் தெரியும், அன்றாட வாழ்க்கையின் தேவைகளைப் பூர்த்தி செய்யும்படியாயும் அதே சமயம் ஆன்மிகத்திலும் ஈடுபடும்படியாகவும் செய்யக் கூடியது குருகுலக் கல்வி முறையே. இந்த குருகுலக் கல்வி முறையில் மாணவன் குருவிடம் தங்கி இருந்து அவரோடு ஒவ்வொரு நாட்களையும் கழித்து அவர் வாய் மூலமாகப் பாடங்களைக் கேட்டு மூளையில் பதிய வைத்துக்கொள்கிறான். வேதக்கல்வி அனைவருக்கும் பொதுவான ஒன்றாக இருந்தாலும் அவரவருக்கு எந்தக் கல்வியில் இஷ்டமோ அந்தக் கல்வியில் ஞானத்தையும், அறிவையும் மேன்மேலும் வளர்த்துக்கொள்ள முடிந்தது. இதற்கு குருவின் அருகாமையிலேயே இருக்க வேண்டும்.
ஒவ்வொருத்தரும் அவரவருக்குத் தேவையானதைக் கற்க முடிந்த காலம் அது, அரசர்கள் ராஜ்ய பரிபாலனம் பற்றியும் வியாபாரிகள் வியாபாரம் குறித்தும், வீரர்கள் ஆயுதப் பயிற்சிகளும், பிராமணர்கள் வேதக்கல்வியோடு சேர்ந்து ஆயுதங்களைக் கையாளவும் தெரிந்து வைத்திருந்தார்கள். வழிவழியாக இவை எல்லாம் காப்பாற்றப்பட்டு ஒவ்வொருத்தரிடம் முறையாக ஒப்புவிக்கப் படுகிறது. வாய்மொழியாகவே வேதம் எப்படிப் பரவி இருக்கிறது என்பதிலிருந்து இதைத் தெரிந்து கொள்ளலாம். அத்தகையதோர் கல்விக்கு மாணவனைத் தயார் செய்து அனுப்புவதே உபநயன சம்ஸ்காரம். இப்போது உபநயனம் செய்யப்படும் வடுவிற்கு என்ன என்ன முறைகள் கடைப்பிடிக்கப் படுகின்றன என்பதைப் பார்ப்போம்.
முதலில் “வடு” என அழைக்கப்படும் சிறுவனை மங்கள நீராட்டுவார்கள். சின்னஞ்சிறு பாலகனை வடு என அழைப்பார்கள். மங்கள நீராட்டிற்கு உதகசாந்தி எனப் பெயர். குடத்தில் நீரை நிரப்பி தேவர்களையும், தேவதைகளையும் மந்திரத்தால் வரவழைத்து அந்த மந்திர ஜபங்களால் அவற்றுக்கு வலுவூட்டி அந்த நீரை உபநயனம் செய்து கொள்ளப் போகும் சிறுவனுக்கு அபிஷேஹம் செய்வது போல் தலையில் விடுவார்கள். இதன் மூலம் அந்தச் சிறுவனின் உடலும் , உள்ளமும் மாசற்றதாக ஆகும் என ஐதீகம். இது உபநயனம் செய்யப் போகும் நாளுக்கு முதல் நாளே நடக்கும். உபநயனத்திற்குச் சிறுவனின் நக்ஷத்திரத்துக்கு ஏற்றவாறு நாள் கணிப்பார்கள். அதற்கு முதல்நாள் இந்த உதகசாந்தி நடைபெறும். மனதில் விபரீத எண்ணங்கள் ஏற்படாமல் இருக்கவும் இந்த மந்திரசக்தி வாய்ந்த புனித நீர் தடுக்கும். மாணவன் மனம் அமைதி பெறச் செய்யும். பின்னர் மாணவனின் வலக்கரத்தில் மஞ்சள் கயிறால் காப்புக் கட்டுவார்கள். இதற்கு ரக்ஷாபந்தனம் எனப் பெயர். இன்னல்களிலிருந்து காக்கும் ரக்ஷை அது.
அதன் பின்னர் குடும்பத்து, குலத்து முன்னோர்களை வழிபட்டு அவர்களுக்கு உணவு படைப்பது. இதற்கு “நாந்தீ என்று பெயர். இதில் ஒன்பது அந்தணர்களுக்கு உணவு படைக்கும் வழக்கம் உண்டு. முன்னோர்களிடம் பிரார்த்தித்துக்கொண்டு உபநயனம் நடைபெறப்போகும் சிறுவனுக்காக ஆசிகளை வேண்டும் விதமாகச் செய்யப்படுவது. பிராமணர்களுக்கு உணவு படைத்த பின்னரே மற்றவர்கள் உணவு உண்ணலாம். பொதுவாக நாந்தி நடைபெறும் வீடுகளில் அவர்களின் சகோத்திரத்தைச் சேர்ந்தவர்கள், தாயாதிகள் மட்டுமே முன்காலங்களில் எல்லாம் சாப்பிடுவார்கள். மற்றவர்களுக்குத் தனியாக உணவு சமைக்கப் பட்டிருக்கும். ஆனால் இப்போதெல்லாம் பொதுவிலே உணவு சமைத்து எடுத்து வரும் வழக்கம் ஏற்பட்டிருப்பதைத் தொடர்ந்து, நாந்தி பிராமணர்களுக்கு உணவு படைக்காமல் வாழைக்காய், அரிசி, பருப்பு கொடுக்கும் வழக்கம் ஏற்பட்டிருக்கிறது. இப்போதைய சூழ்நிலையில் அனைவரும் இதையே விரும்புகின்றனர். ஆசாரக் குறைவு என்பதால் வெளியில் சமைத்து எடுத்து வருவதைப் புரோகிதர்கள் சாப்பிடுவது கிடையாது. ஆகவே இன்றைய சூழ்நிலையில் இதுவே நடைபெற்று வருகிறது. இந்த நாந்தியோடு முதல்நாள் விசேஷங்கள் முடிவடைகின்றன.
4
பிரஹ்மோபதேசம்
முதல்நாளன்றே நடக்கும் இன்னொரு சடங்கு அங்குரார்ப்பணம் என்னும் பாலிகை தெளித்தல். முதலில் புண்யாஹம் செய்வார்கள். பின்னர் நெல், கடுகு, எள், உளுந்து, பச்சைப்பயறு ஆகியவற்றை நீரில் நனைத்து வைத்திருப்பார்கள். மந்திரபூர்வமாக இவற்றிற்கு பூஜை செய்து ஓஷதி சூக்தம் சொல்லி, 5, 7 என எண்ணிக்கையில் சுமங்கலிகளை விட்டு மண்ணாலான கிண்ணங்களில் ஜலத்தோடு தெளிக்கச் சொல்வார்கள். பாலிகைக் கிண்ணங்கள் தனியாக உண்டு. பின்னர் தினமும் அவற்றிற்கு நீர் தெளித்து வந்து ஐந்தாம் நாள் அவற்றை நீர் நிலைகளில் கரைக்க வேண்டும். இப்போதெல்லாம் நீர்நிலை இல்லாததால் ஒரு பெரிய வாளியில் நீரை நிரப்பிக் கொண்டு அவற்றில் கரைக்க வேண்டி இருக்கிறது.
மறுநாள் காலையில் வடுவுக்கு மங்கள நீராட்டி, விக்னேஸ்வர பூஜை, புண்யாஹம் போன்றவைகள் முடிந்து பூணூல் போடப்பட்ட சில பிரம்மசாரி பிள்ளைகளோடு அமர்த்தி வைத்துப் பூணூல் போடப் போகும் சிறுவனுக்கு நெய்யும், பாலும் சேர்த்த உணவு படைப்பார்கள். அநேகமாய் இது பொங்கலாய் இருக்கும். அதிகக் காரமான உணவு கொடுக்க மாட்டார்கள். இதற்குக்குமார போஜனம் என்று பெயர். கூட உணவருந்தும் பிரமசாரிப் பிள்ளைகளுக்கு தக்ஷிணை , புது வேஷ்டி போன்றவை கொடுப்பது உண்டு. பின்னர் சிறுவனின் உடல் சுத்திக்காக சிகையை மழிப்பார்கள். சாதாரணமாகக் குடுமி வைக்கும் போது வெட்டுவது போல் அரை வட்டமாக முன் நெற்றியிலும் பின் இன்னொரு அரைவட்டமாகப் பின்னங்கழுத்து அருகேயும் வெட்டி விடுவார்கள். இதை அப்பளக்குடுமி எனச் சொல்வதுண்டு. இது ரிக், யஜுர் வேதக் காரர்களுக்கானது. சாம வேதக்காரர்களுக்கு முழு மொட்டையாகப் போட்டு விடுவார்கள். பின்னர் பையனுக்கு மாமாவின் சீராகக் கொடுக்கப்படும் வெண்பட்டு உடுத்தி முஞ்சம்புல் என்கிற புல்லை முப்புரி நூலாகச் சிறுவனின் இடுப்பில் கட்டி நாபிக்கருகே முடி போடுவார்கள். இது சிறுநீர்க்கோளாறுகளைத் தடுக்கும் சக்தி வாய்ந்தது என்று அதர்வ வேதத்தில் வருவதாய்ச் சொல்கிறார்கள்.
பின்னர் சிறுவனுக்கு மாலை போட்டு மான் தோலையும் தோளில் அணிவிப்பார்கள். இப்போதெல்லாம் மான் தோல் தடை செய்யப் பட்டிருப்பதால் அணிவித்தல் கஷ்டம். பின்னர் ஆசாரியனிடம் ஊர்வலமாக அழைத்து வருவார்கள்.இப்போது தான் பையனின் மாமா அவனைத் தன் தோளில் தூக்கிக் கொள்வார். கழுத்தில் மாலையையும் மாமா தான் போடுவார். பின்னர் தாய் மாமன், (தாய் வழிப் பாட்டனார்) வீட்டு சீதனங்களை வரிசையாக எடுத்து வருவார்கள். அதில் முறுக்கு, அதிரசம், லட்டு, திரட்டுப்பால், பருப்புத் தேங்காய் ஆகிய ஐந்து பக்ஷணங்கள் முக்கியமாக இருக்கும். பின்னர் பையனின் தாய்க்குப் புடைவை, தந்தைக்கு வேஷ்டி, துண்டு, பையனுக்கு வெண்பட்டு, தங்கப் பூணூல், வெள்ளிப் பூணூல், மோதிரம் போடும் வசதி உள்ளவர்கள் மோதிரம் போடுவார்கள். பூ, பழ வகைகள், மஞ்சள், குங்குமம், வெற்றிலை பாக்கு என வரிசை கொன்டு வந்து மணையில் வைப்பார்கள்.
பின்னர் உபநயனம் நடக்கப் போகும் பையனை மணையில் உட்கார்த்தி வைத்து ஆசாரியர் வேத மந்திரங்களைச் சொல்லி ஹோமம் செய்து லெளகீக அக்னியை வளர்த்துக் குழந்தைக்குப் பலாச தண்டம் அளித்துப் பின்னர் குழந்தையை அம்மியின் மேல் நிற்க வைத்து ஆசீர்வாதங்கள் செய்வார். பலாச தண்டம் ஞாபக சக்தியை வளர்க்கும் எனச் சொல்லப்படுகிறது. மேலும் தேவர்கள் காயத்ரியை ஜபிக்கையில் பலாச மரம் கேட்டுக் கொண்டிருந்து விட்டு காயத்ரியின் மூன்று பாதங்களைப் போல மூன்று மூன்று இலைகளாகத் துளிர் விட்டதாம். ஆகவே பலாச தண்டம் அளிப்பது முக்கியமாய்ச் சொல்லப்படுகிறது. அம்மியில் நிற்க வைத்து ஆசிகள் கொடுத்த பின்னர் தன் சீடனாகப் போகும் மாணவனோடு ஆசாரியர் உரையாடுவார். எதைக்குறித்து உரையாடல் என்பதை அடுத்த அத்தியாயத்தில் பார்ப்ப்போம். அதன் பின்னர் சிறுவனின் கையைப் பிடித்துக்கொண்டு ஹோமம் செய்வித்துப் பின்னர் ஆசாரியரே ஹோமத்தை முழுதும் செய்து முடிப்பார். அதன் பின்னர் பிரஹ்மோபதேசம்.
இதுதான் முக்கியமானது. முப்புரி நூல் முன்னாலேயே அணிவிக்கப்பட்டிருக்கும். இதில் பையனின் மாமா சீராகத் தங்கப் பூணூல், வெள்ளிப் பூணூலும் சேர்த்து அணிவித்திருப்பார்கள். இத்தோடு பூணூலும் அணிவித்திருப்பார்கள். பூணூல், தக்ளியில் நூல் நூற்று மூன்று இழைகள் கொண்டதாய்ச் செய்து அதைக் கட்டை விரலை விடுத்து மற்ற நான்கு விரல்களால் 96 முறை சுற்றித் துணித்துப் பின்னர் நனைத்து மீண்டும் முறுக்கி மூன்றாக முடி போடுவார்கள். இது ஒன்பது இழை கொண்டதாக இருக்கும். பூணூலில் போடப்படும் முடிச்சை பிரம்ம முடிச்சு என்பார்கள். மும்மூர்த்திகளையும் குறிக்கும் இந்த பிரம்ம முடிச்சு. பூணூல் தொப்புள் வரை நீளமாக இருக்கும். இந்தப் பூணூல் என்பது பிராமணர் என்பதைக் குறிக்கும் அடையாளமோ, அணிகலனோ இல்லை. இதன் தொண்ணூற்று ஆறு சுற்றுக்களையும் வாழ்க்கைத் தத்துவமாகவே கூறுவார்கள். நம் உடலின் 25 தத்துவங்கள், ஸத்வம், ரஜோ, தமஸ் போன்ற 3 குணங்கள், திதிகள் 15, கிழமைகள் 7, நக்ஷத்திரங்கள் 27, வேதங்கள் 4, காலங்கள் 3, மாதங்கள் 12 ஆகியன சேர்ந்து 96 என்று கணக்கு.
இதற்கான ஸ்லோகம் ஒன்றும் உள்ளது. “திதி வாரம் சநக்ஷத்ரம் தத்வவேதகுணான்விதம். காலத்ரயம் ச மாஸா: ச ப்ரம்ம ஸூத்ரம் ஹி ஷண்ணவம்” என்ற ஸ்லோகம் இதற்கான பொருளைச் சுட்டுகிறது.
5
மாணவனோடு ஆசாரியர் உரையாடல்
அம்மியில் நிற்க வைத்து ஆசிகள் கொடுத்த பின்னர் தன் சீடனாகப் போகும் மாணவனோடு ஆசாரியர் உரையாடுவார். இந்த உரையாடல் எதைக் குறித்து என விபரம் கீழே:
பூணூலே போடாத குழந்தைக்கு அப்பா, அம்மாவிடம் சொல்லி உபநயனம் செய்யச் சொல்லு என்று சொல்லிக் கொடுக்கவேண்டும். உபநயனத்துக்குத் தயாராக இருக்கும் வடுவிடம் உபநயனத்திற்குப் பின்னர் அவன் செய்ய வேண்டிய நித்ய கர்மாநுஷ்டானங்களைக் குறித்து அவனுக்குப் புரிய வைக்க வேண்டும். இது தான் ஆசாரியர் முக்கியமாய்ப் பையனுடன் நடத்தும் சம்பாஷணை ஆகும். சந்தியா வந்தனம் செய்ய வேண்டியது மிக முக்கியம் என்பதாலும், பிரமசாரியாகப் போகும் சிறுவனுக்கு குருகுலத்தில் இருந்து வேத அத்யயனம் செய்ய வேண்டியதும் கட்டாயம் என்பதாலும், உபநயன காலத்திலேயே ஆசாரியர்கள் உபநயனம் செய்து கொள்ளப் போகும் சிறுவனிடம் சில விஷயங்களைச் சொல்லிவிட்டு அதற்கான தக்க பதிலையும் பெற்றுக் கொள்வார்கள். எல்லாம் வடமொழியில் இருப்பதால் இந்தக் காலத்தில் எல்லாருக்கும் இது புரியும் என்று சொல்ல முடியாது. ஆசாரியார் கேட்டதற்குத் தக்க பதிலைச் சொல்லு என்று சொல்லிக் கொடுப்பதால் அப்படியே குழந்தைகள் சொல்வார்கள். ஆனாலும் இதைக் கடைப்பிடிப்பது மிகவும் அவசியமான ஒன்றாகும்.
ஆசாரியர் மாணாக்கனாகப் போகிறவனிடம்,
“ப்ரும்மசார்யஸி= ப்ரும்மசாரியாக இருக்க வேண்டும்.” என்று சொல்கிறார்.
மாணவன் ஆசாரியரிடம்,
“அப்படியே ஆகட்டும். நன்றாக இருப்பேன்.” என்கிறான்.
ஆசாரியர்: தினமும் உணவு உண்ணும் முன் இத்தனை நாட்கள் நீ பாட்டுக்குச் சாப்பிட்டுக் கொண்டு இருந்தாய். அதைப் போல் இப்போது செய்ய முடியாது. நீ பரிசேஷணம் பண்ண வேண்டும்.” என்கிறார்.
மாணவனும், அப்படியே செய்வதாகச் சொல்கிறான்.
அடுத்து ஆசாரியர் பிக்ஷை எடுத்துத் தான் உண்ண வேண்டும் என்கிறார்.
பிக்ஷாசர்யஞ்சரா= என்றும் பிக்ஷை எடுத்துச் சாப்பிடுவதோடு அல்லாமல் வேத அத்யயனமும் செய்ய வேண்டும் என்றும் கேட்கிறார்.
மாணவனும் சரி, அப்படியே பண்ணுகிறேன் என்பான்.
பின்னர் ஆசார்யதீனோபவ என்று சொல்வார். அதாவது குருவுக்குப் பலன் தரக் கூடியவனாய் இருக்க வேண்டும். உனக்கு எந்த ஒரு குரு வேதத்தைக் கற்றுக் கொடுக்கிறாரோ அவர் சொல்வதை நீ கேட்க வேண்டும்.”
மாணவன் அதற்கும் அப்படியே ஆகட்டும் என்பான்.
பின்னர் தினசரி ஒரு நியமம் நீ தூங்காதே என்று சொல்லுவார்.
இதற்கு அர்த்தம் தூங்காமல் இருக்கக் கூடாது என்பதல்ல. தூங்குவதிலும் ஒரு ஒழுங்குமுறை இருத்தல் வேண்டும். என்பதுவே. இதன் அர்த்தம் பகலில் தூங்காதே என்பதுவே.
மாணவனும் ஒத்துக்கொள்வான்.
இப்போதெல்லாம் இதன் முழுப் பொருளும் தெரியாமல் யந்திரத்தனமாக ஆசாரியர் சொல்ல மாணவனும் அப்படியே சொல்லப் பழகிவிட்டான். உண்மையில் அர்த்தம் புரிந்து கொண்டிருந்தால் இம்மாதிரிப் பிரதிக்ஞைகள் செய்துவிட்டு அதைக் காப்பாற்றமல் இருக்கக் கூடாது அல்லவோ! ஆனால் இன்று அப்படி நடப்பதில்லை. பிரமசாரியாய் இருப்பதில்லை. பிக்ஷை எடுத்து உண்பதில்லை. பகலில் தூங்காமல் இருப்பதில்லை. ஆனால் க்ருஹஸ்தனான பின்னராவது அநுஷ்டிக்க வேண்டியதை அநுசரிக்கலாம் எனப் பரமாசாரியார் கூறுகிறார்.
6
உபநயனம் சில சடங்குகள்
வாமன அவதாரத்தில் வாமனனாக வந்த மஹா விஷ்ணுவுக்கு உபநயனம் நடந்தபோது சூரியன் காயத்திரியை உபதேசம் செய்ததாகவும், உபவீதத்தை ப்ரஹஸ்பதியும்; மேகலையை கச்யப ப்ரஜாபதியும்; நீண்ட ஆயுள், யஷஸ் தரும் மான்தோலை பூமிதேவியும்; நல்ல புத்தி, வேதத்தைக் காத்தல் இதன் பொருட்டு பலாச தண்டத்தை ஸோமனும்; இந்திரிய நிக்ரஹத்தைத் தர கௌபீனத்தை அதிதியும்; குடையை தேவலோகமும்; தீர்த்த பாத்திரத்தை ப்ரம்மாவும்; சுத்தம் தரும் குச புற்களை ஸப்த ரிஷிகளும்; ஜப மாலையை ஸரஸ்வதியும் பிட்சை எடுக்கும் பாத்திரத்தை குபேரனும்; உலகுக்கே தாயாரான உமாதேவி பிக்ஷையையும் அளித்ததாகச் சொல்லி இருக்கிறது. இவ்வளவு சக்தி வாய்ந்த உபநயனம் என்பது வெறும் பூணூலைப் போடும் ஒரு நிகழ்ச்சி மட்டுமில்லை என்பதைப் புரிந்து கொள்வோம். தற்காலங்களில் கெளபீனத்துக்குப் பதிலாக வெண்பட்டு வந்துவிட்டது; அதே போல் பெற்றோரும் ஆடம்பரமாகவே ஒரு திருவிழாவைப்போலவே உபநயன சமஸ்காரத்தை நடத்துகின்றனர். யாருக்கும் இதன் அருமை தெரியவில்லை என்றே சொல்ல வேண்டும்.
இந்த ப்ரஹ்மோபதேசம் தான் உபநயனத்தில் மிக முக்கியமான சடங்கு ஆகும். கூடி இருக்கும் பெரியோர்களிடம் அநுமதி பெற்றுக்கொண்டு, நவக்ரஹங்களுக்கு வழிபாடுகள் செய்து அவற்றைத் திருப்தி செய்து, ஆசாரியருக்குப் பாத பூஜை செய்து, அவரிடம், “ஸாவித்ரியை எனக்கு உபதேசம் செய்யுங்கள்.” என விண்ணப்பிக்க வேண்டும். வெண்பட்டால் தந்தை, குரு, மாணவன் மூவரையும் மூடிக் கொண்டு உபதேசம் நடக்கும். குரு உபதேசம் செய்ததும், பலாச தண்டம் எடுத்துக் கொண்டு மாணவனே ஆசாரியருக்கு தக்ஷிணை கொடுப்பான். பின்னர் குருவானவர் சூரிய வழிபாட்டைப் பற்றியும் சொல்லிக் கொடுப்பார். மந்திரங்கள் மூலம் பல்வேறு விதமான உபதேசங்கள் செய்வார். பிரமசரியத்தை அநுஷ்டிக்கும் விதம் குறித்தும் சொல்லிக் கொடுப்பார். பிரமசரியம் அநுஷ்டிக்கும் மாணவன் பிக்ஷை எடுக்க வேண்டும்; பிக்ஷை எடுத்தே உணவு உண்ண வேண்டும் என்று சொல்வார். மாணவன் “அப்படியே செய்வதாக” வாக்குக் கொடுப்பான். இதன் பின்னரே மாணவன் பிக்ஷை எடுக்க வேண்டும். முதல் பிக்ஷை தாயார் இருந்தால் தாயாரும், பின்னர் பிக்ஷையை மறுக்காத எந்தப் பெண்மணியானாலும் பிக்ஷை இடலாம். அதன் பின்னர் தந்தை இன்னும் வேறு யாரேனும் பிக்ஷை இட்டால் வாங்கிக் கொண்டு ஆசாரியரிடம் அதைக் காட்டி அவர் அநுமதி கொடுத்த பின்னரே உணவு உட்கொள்ள வேண்டும். இதுதான் நடைமுறை.
இப்போதெல்லாம் இப்படி நடைபெறுவதில்லை. பிக்ஷை என்னமோ எடுக்கிறாங்க தான். அரிசியும் போடுவார்கள் தான். ஒவ்வொரு கிண்ணம் அரிசியும் தனியாக அவரவர் கொண்டு வந்து போட்டுக் கொண்டிருந்தது போய்விட்டது இப்போதெல்லாம். அதற்குப் பதிலாக உபநயனம் நடக்கும் வீட்டுக்காரர்களே குறிப்பிட்ட அளவு அரிசியை ஒரு பெரிய அடுக்கில் அல்லது அண்டாவில் வைத்துவிடுகிறார்கள். யாருக்கெல்லாம் பிக்ஷை போட ஆசையோ அவர்கள் எல்லாம் அந்த அண்டாவில் இருந்து எடுத்துப் போட்டுக் கொண்டிருக்க வேண்டியது தான். திரும்ப அதே அண்டாவில் கொட்டப்பட்டு மீண்டும் வேறு யாரானும் அதே அரிசியை பிக்ஷை போடுவார்கள். இவை சமீப காலங்களில் நடைபெறுகிறது. எங்கள் பக்கம் பிக்ஷை இடுகையில் கையில் மட்டைத்தேங்காயோடு வெள்ளிக்காசு ஒன்றும் வைத்துக்கொண்டு பிக்ஷை இடுவார்கள். இப்போதெல்லாம் மட்டைத்தேங்காய் வைத்துக்கொள்வது குறித்து யாருக்கும் தெரியவில்லை. காசு வைத்துக்கொள்வது என்பது ஒரே காசைத் திரும்பத் திரும்ப பிக்ஷை இடும் அனைவரும் பயன்படுத்துகின்றனர். :((
உபநயனம் முடிந்ததும் அந்த பிரமசாரி உப்பு, காரம் மிதமான அளவில் உள்ள உணவையே உட்கொள்ள வேண்டும் . மிகவும் ஆசாரமாக இருப்பவர்கள் உப்பு, காரத்தையே விலக்குவார்கள். குறைந்தது மூன்று நாட்களாவது பிக்ஷை எடுக்க வேண்டும். அரிசியாகவோ, அன்னமாகவோ பிக்ஷை எடுக்கலாம். சந்தியா உபாசனையை விடாமல் செய்ய வேண்டும். காலையில் தினம் சமிதா தானம் செய்ய வேண்டும். பகலில் உறங்கக் கூடாது. நான்கு நாட்கள் உபநயனத்தன்று அணிந்த அதே துணியை அணிய வேண்டும். நான்காம் நாள் ஆசாரியர் வேறு துணியை உடுத்தக் கொடுத்ததும் துணியை மாற்றலாம். நான்காம் நாள் பலாச கர்மா என்பது நடக்கும். இப்போதெல்லாம் அது யாருக்கும் தெரியாது. ஆசாரியரோடு சென்று தேவதைகளை ஆவாஹனம் செய்து பழைய பலாச தண்டத்தை விட்டு விட்டு, புதியதாக ஒன்று எடுத்துக்கொள்வார்கள். இது தான் பலாச கர்மா. இதற்கு கிழக்கு அல்லது வடக்குத் திசையில் செல்லவேண்டும் என்றும் புரச மரத்தடியில் மண்ணால் பிரணவ தேவி, ஷ்ரத்தா தேவி, மேதா தேவி ஆகியோருக்குத் திட்டுகள் அமைத்து மந்திரங்களால் போற்றி ஆவாஹனம் செய்து வழிபடுவார்கள் என தி.வா. சொல்கிறார்.
இந்த உபநயனம் நடைபெறும் முன்னரே வீட்டில் இருந்த பெரியோர்களில் சுமங்கலிகளாக இறந்த பெண்மணிகளை நினைத்து சுமங்கலிப் பிரார்த்தனை எனச் செய்வதுண்டு. இதற்கு நாள் பார்க்க வேண்டும். சாதாரணமாக புதன், வெள்ளி, திங்கள் கிழமைகளில் தான் செய்வார்கள். இதை உபநயனத்துக்குக் குறிப்பிட்டிருக்கும் நாளுக்கு முன்னாலேயே செய்து விட வேண்டும். இதை அடுத்து வெங்கடாசலபதி சமாராதனையும் பல வீடுகளில் வழக்கம் உண்டு. அநேகமாய் வெள்ளிக்கிழமை சுமங்கலிப் பிரார்த்தனையும், சனிக்கிழமை சமாராதனையும் செய்வார்கள். இதை எல்லாம் செய்து முன்னோர்களிடமும், கடவுளிடமும் உபநயனம் நல்லபடியாக முடியப் பிரார்த்திப்பார்கள். பூணூல் இல்லாமல் செய்யும் எந்தக் கர்மாவும் பலனைத் தராது என்பதாலேயே பூணூலே போடாத ஆண்களுக்கும் தேவைப்பட்ட நேரத்தில் சட்டைக்கு மேலேயாவது பூணூலை மாட்டிச் செய்ய வைக்கிறார்கள். இதை பிரம்ம சூத்திரம் என்றும் சொல்வதுண்டு. இதுவே மனிதனின் மனதை ஒருமைப் படுத்தி அவன் தவத்தைக் காக்கும் கவசமாகச் செயல்படுகிறது என்பது ஆன்றோர் வாக்கு.
7
காயத்ரி மந்திரம்
இப்போ காயத்ரி அல்லது சரஸ்வதி என்றால் என்னனு பார்ப்போமா?
ஓம் பூர்: புவ: ஸுவ: தத் ஸவிதுர் வரேண்யம்
பர்கோ தேவஸ்ய தீமஹி தியோ: யோந: ப்ரசோதயாத்
இதுதான் மந்திரம்.
எல்லா பூஜைகளிலும் முதன் முதல் சொல்லப்படுவதும் இதுவே. இதைச் சொல்லாமல் எந்த வழிபாடும் ஆரம்பிக்காது. இதில் இருந்தே இதன் முக்கியத்துவம் தெரிகிறது அல்லவா? இதைக் கண்டறிந்தவர் விஸ்வாமித்திரர். இந்த காயத்ரி மந்திரம் ஜபிக்கப்பட்ட பின்னரே மற்ற மந்திரங்கள் சொல்லி எந்த வழிபாடும் ஆரம்பிக்கும். பெண்களால் செய்யப்படும் வழிபாடுகள் உள்பட. பெண்களும் அவர்கள் செய்யும் எந்த வழிபாட்டிலும் இந்த மந்திரத்தை முதலில் சொல்ல வேண்டும். இந்த மந்திரத்திற்கு காயத்ரி என்ற பெயரைத் தவிர சாவித்ரி, சரஸ்வதி என்ற பெயர்களும் உண்டு. ஏனெனில் இந்த மந்திரத்தைக் காலையில் காயத்ரிக்காகவும், நண்பகலில் சாவித்ரிக்காகவும், மாலையில் செய்யும் சந்தியாவந்தனத்தில் சரஸ்வதிக்காகவும் ஜபிக்க வேண்டும் என்பார்கள். அதே போல ஜபிக்கும் முறையும் காலையில் கிழக்குமுகமாக சூரியனைப் பார்த்துக் கொண்டு கைகளை முகத்துக்கு நேரே கூப்பியும், நண்பகலில் கிழக்குப் பார்த்து அமர்ந்து கைகளை மார்புக்கு நேரே கூப்பியும், சூரிய அஸ்தமனம் ஆகும் மாலை நேரத்தில் மேற்கு முகமாக அமர்ந்து கைகளை நாபிக்கு நேரே கூப்பியும் இருந்த வண்ணம் ஜபிப்பார்கள்.
24 அக்ஷரங்கள் கொண்ட இதில் “ௐ” என்ற பிரணவம் தவிர 3 வ்யாஹ்ருதிகள், 3 பாதங்கள் இருப்பதாய்ச் சொல்வார்கள். இதைச் சொல்லும் முறையும் இருக்கிறது. எனக்கு அவ்வளவெல்லாம் தெரியாது. ஆனால் அவசரம் அவசரமாக ஜபிக்கக் கூடாது. மனம் ஏதோ ஒன்றை நினைத்திருக்க கடனுக்கு காயத்ரியை ஜபிக்கலாகாது.
இதன் பொருளானது பூ உலகம், மத்ய உலகம், மேல் உலகம் மூன்றுக்கும் சக்தியான அந்தப் பரம ஜோதி ஸ்வரூபத்தைத் தியானிப்போம். அந்த சக்தியை தியானிப்பதால் நமக்கு ஞானமாகிய வெளிச்சம் கிட்டட்டும். என்பதுவே. இதன் பிறகாவது அனைவரும் சொல்லும் காயத்ரி மந்திரத்தைப்பொருளுணர்ந்து அனைவரும் சொல்லி லோக க்ஷேமத்துக்குப் பிரார்த்திப்போம்.
முற்றும்.